வட மாகாணத்தின் வளர்ச்சிக்கு ஜனாதிபதி, பிரதமர் முன்னுரிமை – வட மாகாண ஆளுநர்

”வடக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தயாராகவுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் செயற்பாடுகளுடன் போதைப்பொருள் விழிப்புணர்வுகளையும் முன்னெடுக்க வேண்டும்” என்று வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பான மாதாந்த மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் தலைமையில் நேற்று நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாணத் திணைக்கள உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயல்பாடுகளைக் கேட்டறிந்துகொண்ட ஆளுநர், வினைத்திறனான செயற்பாடுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் சிலவற்றை சுட்டிக்காட்டினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற மருத்துவ சோதனைகளுடன் போதைப்பொருட்களின் பயன்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வையும் இணைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பாடசாலைகள் மீளச்செயற்பட ஆரம்பித்துள்ள இந்தத் தருணத்தில் அந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பதன் மூலம் இளம் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்து நல்வழிப்படுத்த முடியும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் மத்திய அரச தரப்பினர் உள்ளிட்டோர் வடக்கு மாகாண வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு முன்னுரிமையையும் ஒத்துழைப்பையும் வழங்குகின்றார்கள்.
எமது மாகாணத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் உரிய முறையில் இனங்கண்டு அவற்றை உரிய வழியில் பெற்றுத்தருவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்க நானும் தயாராகவுள்ளேன்.
அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஆகியவற்றின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அவரவர் கடமைகளைப் பொறுப்புடன் செய்து வினைத்திறனான செயற்பாடுகளின் ஊடாக மாகாணத்தின் வளர்ச்சிக்கும் மாகாண மக்களின் முன்னேற்றத்துக்கும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்” – என்றார்.