ஐபிஎல் 2020 – மும்பைக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அபார வெற்றி!
ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.
நேற்றைய தினம் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். அதிகபட்சமாக பொல்லார்ட் 41 ஓட்டங்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ஓட்டங்களைச் சேர்த்தது.
இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியில், தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்தனர்.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் டேவிட் வார்னர் 85 ஓட்டங்களையும் , சஹா 58 ஓட்டங்களையும் குவிக்க, 17.1 ஓவர்கள் முடிவில் அந்த அணி இலக்கை எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.