பொன்னியின் செல்வன் – ரசிகனின் எதிர்பார்ப்பு [பகுதி 02]

காட்சி 4 : குந்தவை, வானதி அறிமுகம்

கதாநாயகிகள் அறிமுகம். பொதுவாக மணிரத்னத்தின் கதாநாயகிகள் அழகானவர்களாகவும் போராட்டகுணம் உடையவர்களாகவும் இருப்பார்கள். பொன்னியின் செல்வனில் இளையபிராட்டியார் குந்தவையும் வானதியும் அரிசிலாற்றில் படகில் பயணம் செய்கின்றார்கள். இந்தகாட்சியை நிச்சயம் மணிரத்னம் ரசிகர்களின் கண்களுக்கு ஒரு விருந்தாக்குவார். ஏனெனில் இருவரும் அழகில் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை.

இளையபிராட்டியாரிடம் நாற்குணமும் நாற்படையாக இருக்கிறது. வானதியோ ஒரு பயந்தசுபாவம் உடைய பெண். இதனை ஒரு பாடல் மூலம் அவர்கள் தோழிகளுடன் ஆடிப்ப்பாடுவது போல‌ காட்டி, அதன்பின்னர் அவர்கள் இருவரும் தோழிகளை ஆற்றங்கரையில் இறக்கிவிட்டு தேரில் ஏறி குடந்தைச் சோதிடரை சந்திக்கச் செல்கின்றார்கள்.

அங்கே வானதியின் எதிர்காலம், சுந்தரச்சோழரின் சுகவீனம், குந்தவையின் திருமணம்  போன்றவற்றை குடந்தை சோதிடர் விளக்கிகொண்டிருக்கும் போது நம்ம ஹீரோ வந்தியத்தேவனின் தீடீர் பிரவேசம். அதன் பின்னர் குந்தவையும் வானதியும் வெளியே செல்ல வந்தியதேவன் சோதிடருக்கு தன்னை பற்றியும் தன்னை இங்கே அனுப்பியவர் ஆழ்வார்க்கடியான் என்பதையும் கூறுகிறான்.

அதே நேரம் சோதிடரிடம் சோழதேசத்தில் தற்போது இருக்கும் நெருக்கடிக்கு சுமூகமான தீர்வு ஏற்படுமா எனக் கேட்கிறான். இராச்சியங்களின் தலைவிதிகளை சோதிடத்தில் கணிக்கமுடியாது என சோதிடர் அதற்கு மறுத்துவிடுகிறார்.

பின்னர் வந்தியதேவன் குந்தவையும் வானதியும் வந்திறங்கிய அரிலாற்றங்கரைக்கு செல்கிறான். அங்கே அவர்கள் ஒரு முதலையுடன் போராடிக்கொண்டிருக்கும் போது அவர்களுக்கு உதவப்போய் பின்னர் அது பொய் முதலை என அறிந்து அந்தப்பெண்களில் குறிப்பாக குந்தவையின் அழகிலும் குரலிலும் மயங்குகின்றான். அப்போது அவர்கள் அவனை பரிகசிக்க கோபத்துடன் தஞ்சை நோக்கி புறப்படுகின்றான்.

காட்சி 5 : துணை வில்லன்கள் அறிமுகம்

துணை வில்லன்களான பாண்டியநாட்டு விசுவாசிகள் இடும்பன்காரி, சோமன் சாம்பவன், மந்திரவாதி ரவிதாசன் ஆகியோரின் அறிமுகம். இவர்கள் மூவரும் திருப்புறம்பயம் பள்ளிப்படையில் நடந்த சதித் திட்டமும் அதனை ஆழ்வார்க்கடியான் உளவு பார்த்த காட்சியும். இந்தகாட்சியிலும் மணிரத்னதின் வழக்கமான கைவண்ணம் வர வாய்ப்பு உண்டு. ஏனெனில் இது இரவில் நடக்கும் சம்பவம். சிறிய காட்சியாக இருந்தாலும் திரைக்கதையில் வரவேண்டிய சம்பவம் இதுவாகும்.

காட்சி 6: நந்தினி அறிமுகம்

பொன்னியின் செல்வனின் முக்கிய வில்லி நந்தினி அறிமுகம். நந்தினி விஷப்பாம்பிலும் கொடியவள். தன்னுடைய சொந்தப் பகையை தீர்க்க சோழ சாம்ராஜ்யத்தையே ஆட்டிவைத்த அழகி.

ஒரு திரைக்கதையில் கதாநாயகர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவு முக்கியத்துவம் வில்லனுக்கும் இருக்கவேண்டும். அந்தவகையில் பொன்னியின் செல்வனை தாங்கிபிடிக்கும் முக்கிய பாத்திரம் நந்தினி. நந்தினி மூடுபல்லக்கில் தஞ்சைக்கு செல்கின்றார். இந்த இடத்தில் நந்தினி யார் என்றும் அவர் ஏன் சோழ பரம்பரையை அழிக்கவிரும்புகின்றார் என்றதையும் பிளாஷ்பேக் மூலம் காட்டலாம்.

பிளாஷ்பேக் முடிந்ததும் தஞ்சைக்கு செல்லும் வழியில் வந்தியத்தேவனைச் சந்திக்கின்றார். தான் ஆழ்வார்க்கடியானின் ஆள் எனக் கூறி நந்தினியிடம் இருந்து தான் கோட்டைக்குள் இலகுவாக உள்ளே நுழைய தந்தமோதிரம் ஒன்றை பெற்றுக்கொள்கின்றான்.

மோதிரத்துடன் தஞ்சை கோட்டை வாசலை அடைந்த வந்தியதேவனை ஒருசிறுவன் வழிமறித்து  ‘வேளக்காரப்படைகள் வருகின்றன. ஆகவே, சற்று நேரம் குதிரையில் இருந்து கீழே இறங்கி நில்லுங்கள்’ என்கிறான். அந்த சிறுவன்தான் சேந்தன் அமுதன். அன்றிரவு வந்தியதேவன் சேந்தன் அமுதன் வீட்டில் தங்குகின்றான் அங்கே சேந்தன் அமுதனது வாய்பேசமுடியாத தாயையும் சந்திக்கின்றான். அன்றிரவு அமுதனும் வந்தியதேவனும் அரண்மனையில் நடைபெறும் சம்பவங்கள் பற்றி உரையாடுகின்றார்கள்.

அமுதன் கோடிக்கரையில் இருக்கும் தன் மாமன் மகள் பூங்குழலி பற்றியும் சொல்கின்றான். இங்கே பூங்குழலியை அறிமுகம் செய்வதை விட வந்தியத்தேவன் ஈழத்துக்கு போகும் காட்சியில் அறிமுகம் செய்வது திரைக்கதையை ஒரு linear பாணியில் கொண்டுசெல்லும். இல்லாவிட்டால், திரைக்கதை ஒரு non linear ல் போகும் வாய்ப்புண்டு.

காட்சி 7: தஞ்சைக் கோட்டை

 தஞ்சைக் கோட்டையை வடிவமைப்பது  கலை இயக்குனருக்கு பெரும் சவாலாகும். பிரமாண்டமான அந்தக்கோட்டையும் அரண்மனைகளும் தமிழர்களின் அந்தநாள் கட்டடக்கலையை உலகிற்கு எடுத்தியம்பிய தொன்மங்களாகும்.

தஞ்சைக்கோட்டையினுள் வந்தியதேவன் உள்நுழைகின்றான். அவனின் முக்கிய வேலை சக்கர்வர்த்தியை சந்தித்து ஓலை கொடுப்பதும், ஆதித்தகரிகாலன் வாய்மொழிமூலம் சொல்லிய செய்தியை தெரிவிப்பதுமே. ஆனால் அது அவ்வளவு இலகுவான காரியமில்லை என்பதும் அவனுக்கு தெரியும். ஆகவே அவன் சின்னப்பழுவேட்டரையரை சந்திக்கிறான். அவருடன் சேர்ந்து சக்கரவர்த்தியை சந்திக்கின்றான்.

இந்தக் காட்சியில் சின்னப் பழுவேட்டரையர், சக்கரவர்த்தி சுந்தரசோழர், சக்கரவர்த்தினி வானமாதேவி ஆகியோரின் அறிமுகம்.

தொடரும்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!