சபாநாயகர் சலூனுக்குச் சென்றதால் சர்ச்சை

அமெரிக்காவில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, சலூனுக்குச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில், ஒவ்வொரு மாகாணங்களிலும், வைரஸ் பாதிப்புகளுக்கு ஏற்ப, கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோவில், சலுான்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதிநிதிகள் சபை சபாநாயகரும் ஜனநாயக கட்சி உறுப்பினருமான நான்சி பெலோசி ஆகஸ்ட் மாதம் 31 ‍ஆம் திகதி கட்டுப்பாடுகளை மீறி இங்குள்ள ஒரு சலுானுக்கு சென்றுள்ளார். ஈரமான தலையுடன், முக கவசத்தை முகத்தில் அணியாமல் கழுத்தில் அணிந்தவாறு, பெலோசி நடந்து செல்லும் சி.சி.டி.வி., காட்சிகளை கடையின் உரிமையாளர் வெளியிட்டு உள்ளார்.

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, நேற்று முன்தினம், நான்சி பெலோசி கூறியதாவது: “நான் அந்த சலுானுக்கு பல ஆண்டுகளாக சென்று வருகிறேன். அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, சலுானில் ஒரு சமயத்தில், ஒரு நபருக்கு முடி திருத்தம் செய்ய அனுமதி உள்ளது என்றனர். அதை நம்பித்தான் நான் சலுானுக்கு சென்றேன்.  அது பொய் என்பதை பின்பு தான் உணர்ந்தேன். என்னை இழிவுபடுத்தவே, அவர்கள் என்னை ஏமாற்றி, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

நான் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி, முக கவசம் அணியாமல் இருந்ததாக கூறுவது தவறு. தலை முடியை, நீரில் கழுவும்போது முக கவசம் அணிய இயலாது என்பதால், அதை நான் அப்போது அணியவில்லை. எனினும், முகக்கவசத்தை நான் எப்போதும் அணிந்திருப்பேன்.” இவ்வாறு அவர் கூறினார். எனினும், நான்சி பெலோசியின் குற்றச்சாட்டை சலுான் உரிமையாளர் கியஸ் மறுத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!