48 மணி நேரத்தில் 80 பேருக்கு ‘கொரோனா’ தொற்று
இலங்கையில் கடந்த 48 மணி நேரங்களில் 80 பேருக்கு கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதியும் கொரோனா ஒழிப்புச் செயலணியின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூா்வ ருவிட்டர் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நீங்கிவிடவில்லை. எனவே, மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும்” எனவும் அவா் கோரிக்கை விடுத்துள்ளார்.
“கொரோனா வைரஸ் தொற்று ஆபத்து இல்லை என்ற நம்பிக்கையுடன் சிலர் முககவசங்களைக் கூட அணிவதில்லை” எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
“சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் கவனமாகச் செயற்பட வேண்டும்” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் சமூகத் தொற்று இல்லை என்ற போதும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்கள் அதிகளவில் தொற்றுக்குள்ளாகி வருவது கவலைகளை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.