ராஜித, ரூமிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடகவியலாளர் சந்திப்பில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கு எதிராகஇன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரதிவாதிகளை 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கும் நீதிபதி உத்தரவிட்டார். இரண்டு பிணையாளர்களில் ஒருவர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
பிணையாளர்கள் நீதிமன்ற எல்லைக்குள் வசிப்பவர்கள் என கிராம சேவையாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் பொலிஸ் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதற்கு முன்னர் ஒரு தடவை நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காத சந்தர்ப்பம் பதிவாகியுள்ளதால், அவர்கள் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்பதை உறுதிப்படுத்த பொலிஸில் முன்னிலையாக வேண்டும் என்று நிபந்தனை விதிக்குமாறு பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அதுபோன்ற நிபந்தனைகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, பிரதிவாதிகள் இருவரையும் வெளிநாடு செல்லத் தடை விதித்ததோடு, அது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அதனை அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் போலி தாடி அணிந்து மாறு வேடமிட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற இரண்டு நபர்களும் முக்கிய சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.