பயணம் – 02

கண்களில் தொக்கி நின்ற ஏக்கங்கள் ஏராளமாக செறிவாகிக் காணப்பட்டன. முதுமையின் முகவரிகள் மூடுபனியாகிக் காணப்பட்டன. சில்லறைகளாகிக் காணப்பட்ட வேதனைகள் எல்லாம் சேர்வையாக்கப்படுகின்றன.

அரச முதியோர் இல்லத்தின் ஒலிபெருக்கிகள் பிரச்சாரத்துக்குத் தயாராகிக் கொள்கின்றன. வழமைபோன்று முதியோர்களின் ஒன்று கூடலுக்கு தயார்ப்படுத்தல்கள் இறுதிக்கட்டத்தில் நின்று கொண்டிருந்தன. முதியவர்களின் எண்ணக் குமுறல்களுக்கு விடை காண்பதற்கான நிகழ்ச்சி நிரல்கள் என்முன் எழுந்து நின்றன.

முதுமையின் அனுபவப் பகிர்வுகளாக புதிய களம் ஒன்று அமைக்கப்பட்டது. நீண்ட காலங்களாக கவலைகளை விரட்ட முடியாமல் போய்விட்டதனாலோ என்னவோ அந்த முதியவரின் கரங்களும் உதடுகளும் துடித்துக்கொண்டிருக்க, முதுமையின் இயலாமையை நாற்காலி ஒன்று சுமந்து கொள்கின்றது.

அந்த அம்மாவின் உதடுகள் கூட புன்முறுவலை வரவழைக்க வலிந்த தாக்குதலை நடாத்திக்கொண்டன. என்ன செய்வது? ஒன்றும் முடியவில்லை. இயல்பான தோற்றம் விட்டு அகல மறுத்து வார்த்தைகள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு நின்றன.

”ஒலி வாங்கியைப் பிடியுங்கோ அம்மா. உங்களுக்கு விருப்பமான விடயங்களைத் தெரிவியுங்கள்” எனக் கூறிக்கொண்டு உத்தியோகத்தர் ஒருவர் அந்த முதியவரை அணுகிக் கொள்கின்றார். ஒலிவாங்கியை வாங்கிக் கொண்ட ஒருகணம் கண்களை மூடித்திறந்து கொள்கின்றார்.

”கடவுளே! ஆண்டவரே! இங்குள்ள அனைவரையும் ஆசீர்வதியும்; அனைவருக்கும் உமது கிருபையையும், அன்பையும் அருளும் தந்தையே!” எனக் கூறிக்கொண்டு இருக்கையில், அவரது கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் சொட்டிக்கொண்டன. தொடர்ந்து அவரது வேண்டுகோளைக் கேட்கும்போது தூக்கிவாரிப் போட்டது. “இந்த ஐயாவுக்குத் தனது வேலைகளை தானே செய்யக்கூடிய வல்லமையை கொடும் ஆண்டவரே! தானே இவர் தனது வேலைகளைச் செய்ய வேண்டும். எதற்கெடுத்தாலும கதிரையில் இருந்து கொண்டு மணி அடித்து, மணி அடித்து மற்றவர்களைக் கூப்பிட்டு வேலைகளைச் செய்விக்கிறார். கடவுளே இந்த ஐயாவுக்கு இந்த வல்லமையைக் கொடும்” கூறிக்கொண்ட மிகுதி வார்த்தைகள் கிரகிப்புக்குள் சிக்கிக்கொள்ளாமல் விடை பெற்றுக்கொள்கின்றன.

மனநிலை பாதிக்கப்பட்டவராக முதியோர் இல்லத்தில் வசித்து வரும் இந்த முதியவர் தனது கவலைகள், துன்பங்கள், குடும்ப உறுப்பினர்களின் உறவைத் தொலைத்துவிட்ட தொடர்புகள் எல்லாவற்றையும் மறந்து, இங்குள் நிர்வாக நடைமுறையை அவதானித்து கிலேசித்த மன உணர்வில் விளங்கிக்கொண்டு கடவுளிடம் இரந்து வேண்டியுள்ளார்.

நிர்வகிக்கும் திறன் சாதாரண ஒருவருக்கு அல்லது கற்றவருக்கு இது நிர்வாகத்தின் செயல் என விளங்கிக்கொள்ளும். அசாதாரணமான நிலையில் வாழ்பவருக்கு இச்செயல் பரிதாபமான ஒன்றாகத் தெரிந்துள்ளது. ஒரு விடயத்தை பலரும் பலகோணங்களில் பார்க்கலாம். எங்களது சுபாவத்திற்கு அமைய இச் செயல்களின் தோற்றங்கள் நிஜ விம்பங்களாகின்றன. இங்கு மனநிலை பாதிப்புக்குள்ளான முதியவர் கூட பிறர் நலனின் மேம்பாட்டுக்கான சிந்தனையைக் கொண்டுளார்.

இத்தேவைப்பாடு தவறானது என்பது உண்மைதான். ஆனாலும், இன்னமும் இத்தகைய நல்ல சிந்தனைகள் ஓடிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான விடயமாகத்தானே இருக்கின்றது.

இன்று கூட்டுக் குடும்பங்கள் மறைந்து தனிக் குடும்பங்களின் ஆதிக்க மேலீட்டால் ஆரோக்கியமான சிந்தனைகள் கூட தேடலில் விட வேண்டிய விடயமாக இருக்கின்றது. பக்கத்து வீட்டைக்கூட எட்டிப்பார்க்க விரும்பாமல் பலமான மதில்களும், இரும்புக் கதவுகளும் இன்று அமைக்கபடுகின்றன. இத்தகைய நிலைப்பாட்டில் சிந்தனைகள் பிறர் நலன் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்பது இந்த முதியவரின் எண்ணப்பகிர்வில் எஞ்சிய விடயமாக இருகின்றது.

வந்தோம், இருந்தோம், சென்றோம் என்ற வாழ்க்கையின் முப்பரிமாணங்களில் சிந்தித்தோம் என்ற விடயமும் இருப்பின் மனிதனின் பிறப்பின் பயன் நுகரபட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இங்கு முதுமை ஒன்று புதுமையான முறையில் நகைச்சுவைக் கலப்புடன் ‘பிறர் நலன்’ எனபதை முக்கியமாக்கி விட்டுச் சென்றுள்ளது அல்லவா?

இந்த வழித்தடத்தில் எம்மையும் இணைத்துக்கொண்டு ஏன் நாமம் செல்லக்கூடாது? இதற்காக எந்த இழப்பு ஏற்படும் அல்லது ஏற்பட்டுவிடும் என எண்ணி எந்தக் காப்புறுதி நிறுவனத்திலும் காப்புறுதி செய்யத் தேவையில்லை.

இன்னுமோர் பயண அனுபவப்பகிர்வுகான காத்திருப்புடன் விடை பெற்றுகொள்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!