இலங்கை தாதா பெங்களூருவில் கொலை

பெங்களூருவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட இலங்கை தாதாவின் சடலம் கோவையில் எரிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் போதைப் பொருள் கடத்தும் நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர் அங்கொட லொக்கா. கடந்த 2017ல் மற்றொரு கடத்தல் கும்பலை சேர்ந்த 7 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இவர், இலங்கையிலிருந்து தப்பி சென்னையில் பதுங்கியுள்ளார். இரு வேறு வழக்குகளில் சென்னை பொலிஸார் இவரை கைது செய்தனர். பிணையில் வெளிவந்தவர் பெங்களூருவுக்கு தப்பினார்.
பெங்களூருவில் கடந்த ஜூலை 3ம் திகதி அங்கொட லொக்கா கொல்லப்பட்டதாகவும், அவருடன் நெருங்கிப் பழகிய பெண் ஒருவர் அவருக்கு மதுவில் விஷம் வைத்து கொன்றதாகவும், அவரது உடல் கோவையில் எரிக்கப்பட்டதாகவும் இலங்கை ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. மேலும், இதுகுறித்த வீடியோக்கள் இலங்கை பொலிஸாரிடம் கிடைத்திருப்பதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கை ஊடகங்கள் வெளியிட்ட தகவல் உண்மைதானா என்பது குறித்து தமிழக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை எஸ்.எஸ்.பி., ஜலியா செனரத்தன, ”அங்கொட லொக்கா உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. தகவல்களை பெற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.