மங்கள உடன் இணைந்து செயற்பட தயார் – சந்திரிகா

மங்கள உடன் இணைந்து செயற்பட தயார் – சந்திரிகா

“அதிகார வெறித்தனத்திலும் பதவி ஆசையிலும் இருப்பவர்களுக்கு எதிராக மங்கள சமரவீரவுடன் இணைந்து செயற்பட நான் தயாராக இருக்கின்றேன்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை வாயால் சொல்ல முடியாதளவுக்கு படுமோசமாக  இருக்கின்றது. இந்தநிலையில் நாடாளுமன்ற அரசியலிலிருந்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர விலகியதை நான் வரவேற்கின்றேன். அவர் அவ்வாறு விலகுவது எனக்கு விருப்பம் இல்லை. எனினும், தற்போதைய நிலைமையில் அவர் விலகியதை வரவேற்கின்றேன்.

மாத்தறை மாவட்ட மக்களின் பெருமதிப்புக்குரியவராக – அன்புக்குரியவராக மங்கள இருக்கின்றார். எனினும், அவர் திடீரென நாடாளுமன்றத் தேர்தல் போட்டியிலிருந்து விலகியமை அம்மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நாடாளுமன்ற அரசியலிலிருந்து தான் விலகியமைக்கான காரணங்களை அவர் என்னிடம் நேரில் வந்து  தெரிவித்துள்ளார். அவரின் பக்கம் நியாயம் இருக்கின்றது. எனினும், நாடாளுமன்றத்தில் அவரின் பிரதிநிதித்துவம் தவிர்க்க முடியாததாகும்.

தான் நாடாளுமன்றத்துக்கு இனிமேல் செல்லத் தயார் இல்லை என்று அவர் விடாப்பிடியாக இருக்கின்றார். ஆனால், வெளியில் இருந்து அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க அவர் தயாராக இருக்கின்றார். இனிமேல் அவர் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் நான் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவேன். ஏனெனில் மக்கள் நிம்மதியுடன் வாழ வேண்டுமெனில் இந்த நாடு உருப்படியாக இருக்க வேண்டும்.

நாட்டில் தற்போது நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன். அதற்கேற்ற மாதிரி எனது நடவடிக்கைகளை மங்களவுடன் இணைந்து முன்னெடுப்பேன்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!