வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 315 பேருக்குக் கொரோனா இல்லை

ஜூலை 9, 2020

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த 315 பேரின் பரிசோதனை முடிவுகளில், அவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஆயினும், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்ட கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

315 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் நேற்றுமுன்தினம் 170 பேருக்குத் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனையோரின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டமைக்கமைய 315 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைக்கு அடிமையான ஒருவர், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து கடந்த ஜூன் மாதம்  27ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சுகவீனமுற்ற அந்தக் கைதிக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதோடு, அவருடன் தொடர்புடைய சுமார் 180 பேர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளும் சிறைக்கைதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொடர்பான பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளைப் பார்வையிட வருவதற்கு, மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!