யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை ஆரம்பம்

அக்டோபர் 30, 2020

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்திரம் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்திலும் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று யாழ். பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.கேதீஸ்வரன், உதவிப் பணிப்பாளர் மருத்துவர் எஸ். குமாரவேல், யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ்.ரவிராஜ், சமுதாய மருத்துத் துறைத் தலைவரும் பல்கலைக்கழக கொரோனா தடுப்புச் செயலணியன் இணைப்பாளருமான மருத்துவர் எஸ்.சுரேந்திரகுமாரன் மற்றும் நுண்ணுயிரியல், நோயியல் துறை விரிவுரையாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிப்பதற்கு அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பி.சி.ஆர். பரிசோதனைகளுக்குத் தேவையான மாதிரிகளை மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்வது எனவும், ஆய்வு நடவடிக்களுக்கான நுண்ணுயிரியல் சிறப்பு ஆலோசனைகளை வழங்குவதற்கும், தேவையான உயரியல் காப்பு முறைகளைக் கண்காணித்து அறிவுறுத்தல் வழங்குவதற்கு யாழ். போதனா வைத்தியசாலையின் ஒட்டுண்ணியியல் நிபுணர் வைத்திய கலாநிதி திருமதி ரஜந்தி இராமச்சந்திரன் செயற்படுவார் என்றும், உயிரியல் மற்றும் ஆய்வு கூடக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றும் பணியை யாழ். போதனா வைத்தியசாலை மேற்கொள்ளும் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!