20′ திருத்தத்தால் அரசுக்குள் எவ்வித பாதிப்பும் ஏற்படாது – சரத் வீரசேகர

அக்டோபர் 18, 2020

“அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தனிப்பட்ட தரப்பின் யோசனை அல்ல. ஆளும் தரப்பின் அனைத்து உறுப்பினர்களின் யோசனைகளுக்கு அமையவே உருவாக்கப்பட்டது. எனவே, 20 ஆவது திருத்தத்தால் அரசுக்குள் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.”

– இவ்வாறு அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்


கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நல்லாட்சிக் காலத்தில் அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நாட்டு நலன் கருதி கொண்டு வரப்படவில்லை. அரசியல் பழிவாங்கல் உள்ளிட்ட குறுகிய நோக்கங்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

20 ஆவது திருத்தம் ஒரு வார காலத்துக்குள் உருவாக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதியை நம்பி அப்போதைய எதிர்க்கட்சியினர் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினார்கள்.

எவரது வாக்குறுதியின் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாத காரணத்தால் நான் மாத்திரம் தற்றுணிவுடன் 19ஆவது திருத்ததுக்கு எதிராக வாக்களித்தேன். 19ஆவது திருத்தம் நல்லாட்சியின் சாபக்கேடு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சிக்கும் அளவுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தியது.

நல்லாட்சி அரசின் வீழ்ச்சிக்கு 19ஆவது திருத்தமே மூல காரணியாகும். இந்தத் திருத்ததை இரத்துச் செய்யாமல் அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியாது என்பதற்காகவே 20 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!