தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – அடுத்தது என்ன..?

ஆகஸ்ட் 13, 2020

(க. கோபிகிருஷ்ணாவின் Facebook பதிவிலிருந்து…)

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கணிசமான பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. வெறுமனே 10 ஆசனங்களுடன் அக்கட்சி இப்போது இருக்கிறது. இந்தப் பின்னடைவென்பது திடீரென்று இத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மாத்திரம் கிடையாது. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அச்சரிவு சிறிது தென்பட்டிருந்தது, பின்னர் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் மிகப்பெரிய சரிவு தென்பட்டிருந்தது.

கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளையும், கடும்போக்குத் தமிழ்த்தேசிய (அல்லது போலித் தமிழ்த்தேசிய) கட்சிகளான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் பெற்றுள்ள முன்னேற்றங்களையும் வைத்துப் பார்க்கும்போது, “குறித்த இரு கட்சிகளையும் மக்கள் ஆதரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள், கூட்டமைப்பு மீதான நம்பிக்கையை இழந்துவருகிறார்கள், ஆகவே, கடும்போக்குத் தேசியவாதத்தின் பக்கமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செல்ல வேண்டும் அல்லது அதை ஆதரிக்கின்ற மக்களின் விருப்பங்களை வெல்ல வேண்டும்” என்ற எண்ணம் அல்லது கருத்து உருவாக்கம் பெறுவது தவிர்க்கப்பட முடியாதது.

ஆனால், அவ்வாறான கருத்து மாத்திரமே அது சரியானதென ஆகிவிடாது.

இலகுவான உதாரணம்:
மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இலங்கையில் 145 ஆசனங்களைப் பெற்று, கிட்டத்தட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியும் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியும் படுதோல்வியடைந்திருக்கின்றன. அதற்காக, “பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு ஒத்ததான கொள்கைகளைக் கொண்டிருங்கள்” என்று, சீரியஸான எந்த விமர்சகரும் ஐ.தே.கவையோ, ஐக்கிய மக்கள் சக்தியையோ பார்த்துச் சொல்வதில்லை. ஏனென்றால், தேர்தல் வெற்றிகள் மாத்திரம், ஒரு கொள்கையின் நியாயத்தன்மையையும் உண்மைத்தன்மையையும் சரியான நிலைப்பாட்டையும் சொல்வதில்லை.

ஆனால் அதற்காக, பொதுஜன பெரமுனவிடமிருந்து மேற்கூறப்பட்ட இரு கட்சிகளும் பாடமெதனையும் கற்றுவிட முடியாதென்றில்லை. கட்சி ஒழுங்கமைப்புகள், தேர்தல் பரப்புரைத் திட்டங்கள், பரப்புரை வடிவங்கள் போன்றவற்றில் ஏராளமான விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

அதேபோல் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் அம்மாற்றங்கள், பொய்ப் பித்தலாட்டங்களையும் உசுப்பேற்றும் நிகழ்ச்சிநிரல்களையும் கொண்டவையாக இருக்கக் கூடாது. ஏனென்றால், தலைமைத்துவமென்பது அது கிடையாது. அரசியல் தலைமைத்துவத்துக்குள் தேர்தல் என்பது முக்கியமானது, ஆனால் தேர்தலைத் தாண்டிய ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.

அதேபோன்றுதான், கிழக்கில் “அபிவிருத்தி” பேசிய அரசியல்வாதிகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். ஆகவே, அவர்களைத் தூக்கிப்பிடிக்கின்ற ஒன்றையும் பார்க்கிறேன். ஆனால், மக்களின் உரிமைகளைப் புறந்தள்ளுகின்ற வகையில் அபிவிருத்திக் கோஷங்களை முன்னெடுக்கின்ற சூழ்நிலையென்பது பொருத்தமானது கிடையாது.

கேலிக்கூத்தான விளக்கமொன்றையும் சில நாட்களுக்கு முன்னர் பார்த்திருந்தேன். “அபிவிருத்தி பேசியதால் மாத்திரம் அங்கஜன் வென்றிருக்கவில்லை. அவரும் தமிழ்த் தேசியம் பேசினார். புலிகளின் பாடல்களை ஒலிபரப்பினார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவன் என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்தினார். ஆகவே, அங்கஜனின் வெற்றியை அபிவிருத்தி அரசியலுக்கான வெற்றியாகப் பார்க்க முடியாது” என்று பகிரப்பட்டிருந்தது.

இதன்மூலமாக, ஒன்றில், “புலிகளின்/பிரபாகரனின் பெயரைச் சொல்லிக்கொண்டு கோட்டாபய வாக்குக் கேட்டாலும் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள். அந்தளவுக்கு உணர்வுகளால் தூண்டப்படும் முட்டாள்களாகத் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்” என்று சொல்கிறார்கள். இல்லாவிட்டால், “புலிகளின்/பிரபாகரனின் பெயரைச் சொல்வதுதான் தமிழ்த் தேசியம்” என்று சொல்கிறார்கள். இரண்டுமே அபத்தமான நிலைப்பாடுகள்.

ஒரு தரப்பின் வெற்றிக்குப் பின்னராக அத்தரப்பின் வெற்றியைக் கொண்டாடுவதற்குக் காரணங்களைத் தேடுவதும், ஒரு தரப்புத் தோல்வியடைந்த பின்னர் அத்தரப்பின் தோல்விக்குக் காரணங்களைத் தேடுவதும் இலகுவானது. வெற்றிபெற்ற தரப்பு மேற்கொண்ட அனைத்தும் சரியாக அமைந்திருக்காது. தோல்வியடைந்த தரப்பு (கூட்டமைப்பைப் பொறுத்தவரை, பின்னடைவைச் சந்தித்த தரப்பு), மேற்கொண்ட அனைத்தும் தவறானது என்றும் அமையாது.

என்னைப் பொறுத்தவரை, தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினையைக் கையாள்வதில் நம்பிக்கைக்குரிய தரப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நான் இன்னமும் கருதுகிறேன். முன்னரே ஒரு பதிவில் சுட்டிக்காட்டியதைப் போல, இறுதிக்கட்டப் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்னமும் நம்புகிறார்கள். அப்பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் இழக்கப்பட்ட மக்களின் வாக்குகள், அபிவிருத்தியை முன்னெடுப்பதாகக் கூறிய தரப்புகளுக்குச் சென்றிருக்கின்றனவே தவிர, நாளுக்கு இரண்டு முறை முள்ளிவாய்க்காலை உச்சரித்து, அதை வைத்து அரசியல் செய்யும் தரப்புகளுக்குச் சென்றிருக்கவில்லை. எனவே, கஜேந்திரகுமாரின் அல்லது விக்னேஸ்வரனின் அரசியலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்யத் தேவையில்லை, செய்யக் கூடாது.

என்னைப் பொறுத்தவரை, அரசியல் தீர்வு விடயத்தில், அடையக்கூடிய திட்டங்களைக் கூட்டமைப்புக் கொண்டிருக்கிறது. இப்போது அது செய்ய வேண்டியிருப்பது, தமது அரசியல் தீர்வு நிலைப்பாடு ஏன் நியாயமானது என்பதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான். “இரு தேசம், ஒரு நாடு” (சின்னக் குறிப்பொன்று — அந்த இரண்டு தேசங்கள்: நல்லூரும் நல்லூரைச் சூழ்ந்த சூழலும், நல்லூருக்கு வெளியே), “இனப்படுகொலையை நிரூபிப்போம்”, “கோட்டாவை மின்கதிரையில் ஏற்றுவோம்” போன்ற வெற்றுக் குரலோசைகளைத் தாண்டி, அடையக்கூடிய தீர்வு தங்களிடம் இருக்கிறதென்பதைக் கூட்டமைப்பு மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும்.

கஜேந்திரனினதும் விக்னேஸ்வரனினதும் அரசியலைக் கூட்டமைப்பு எவ்வாறு செய்யக்கூடாதோ, அவ்வாறே அங்கஜனின் அல்லது டக்ளஸின் அரசியலையும் கூட்டமைப்புச் செய்யக் கூடாது.

கூட்டமைப்பின் கடந்தகால அரசியலில், அபிவிருத்திக்குப் போதுமான முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அது சரியானது. தேர்தலுக்கு முன்னராக, அக்குற்றச்சாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றிருந்தது. ஆகவே, இப்போதைய சூழலில் அதை எவ்வாறு முன்னெடுக்கப் போகிறது என்பதுதான் கூட்டமைப்புக்கான சவாலாக இருக்கப் போகிறது. வடக்கில் டக்ளஸுக்கும் கிழக்கில் வியாழேந்திரனுக்கும் கிடைத்திருக்கும் அமைச்சுப் பதவிகள் மூலமாக, கூட்டமைப்பின் வகிபாகத்தைத் தமிழ் மக்களின் அபிவிருத்தி அரசியலிலிருந்து முற்றாக அழித்துவிடவே முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பிள்ளையானுக்கும் அமைச்சுப் பதவி கிடைக்கலாம் என்ற கருத்துக்கள் நிலவுகின்றன. “என் கனவு யாழ்” என்பது “என் பிரதிக் கனவு யாழ்” என்றுதான் அதிகபட்சமாக மாறக்கூடுமென்ற போதிலும், அக்கனவும், கூட்டமைப்புக்கு எதிராகவே பயன்படுத்தப்படவிருக்கிறது. இதற்கு மத்தியில் அபிவிருத்தி நோக்கிய அரசியலைக் கூட்டமைப்பு எவ்வாறு முன்னெடுக்கப் போகிறது என்பது, இங்கு இருக்கின்ற முக்கியமான சவால்.

அதேபோல், கூட்டமைப்பின் பிரதானமான பங்காக இன்னமும் இருக்கின்ற அரசியல் உரிமைகள் விடயத்தை அது எவ்வாறு கையாளுமென்பதுவும் இப்போதுள்ள மிகப்பெரிய சவால். கூட்டமைப்பை இவ்வரசாங்கம் எவ்வாறு கையாளுமென்ற சந்தேகமே இருக்கத் தேவையில்லை என்றாலும், தமது தரப்பில் வென்ற தமிழ் உறுப்பினர்களுடன்தான் இனிமேல் பேசப்போவதாக பசில் ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கும் கருத்து, அவர்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாகவே காட்டியிருக்கிறது. குறைவான பிரதிநிதிகள் பலம், முற்றுமுழுதாகப் புறக்கணிக்கப்போகும் அரசாங்கம் என்பன கூட்டமைப்புக்கு எதிராக இருக்க, எதைச் செய்யப் போகிறார்கள்?

என்னைப் பொறுத்தவைர, கூட்டமைப்பில் கடந்த சில ஆண்டுகால அரசியல், மக்களிடமிருந்து விலத்தியிருந்தது. கூட்டமைப்பின் நடவடிக்கைகள் எவையும் மக்களுக்கு விரோதமானவையாக இருந்தன என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், மக்களிடமிருந்து விலத்தியிருந்தது. “கூட்டமைப்பில் போட்டியிட்டால் எக்கழுதைக்கும் மக்கள் வாக்களிப்பார்கள்” என்ற தன்னிறைவு (complacency) உணர்வு இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். எல்லோருக்கும் தேசிய மட்ட, சர்வதேச மட்ட அரசியலில் ஈடுபட விருப்பம் இருந்தமை, அதன்மூலமாகக் கிடைக்கும் சர்வதேச அங்கீகாரம் என்ற போதையை விரும்பியமை காரணமாக இருந்திருக்கலாம். இவ்வாறு பல்வேறான காரணங்களை அடுக்கிச் செல்லாம். ஆனால், ஊர் மட்டத்தில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மக்களிடத்தில் போய்ச் சேரவில்லை என்பதுதான் உண்மை. இப்போது அரசாங்கத்துக்கு எதிரான கட்சியாகக் கூட்டமைப்பு மாறியிருக்கின்ற நிலையில், மக்களோடு இணைந்து செயற்படும் வாய்ப்பு அதிகமாக எட்டியிருக்கிறது. இதைப் பயன்படுத்தி, மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பற்றியும் ஆராய வேண்டிய தேவையும் கடமையும் கூட்டமைப்புக்கு இருக்கிறது.

அதேபோல், மேலே சொன்ன தன்னிறைவு உணர்வின் காரணமாக அல்லது அதிகாரப் போதை காரணமாக, கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும், மக்களிலிருந்து விலகியே இருந்திருக்கிறார்கள். இந்நிலையில், கட்சிப் பொறுப்புக்களிலிருந்து ஓய்வுபெற்று, இளையவர்களுக்கு வழிவிடுவதுதான் இப்போது பொருத்தமாக இருக்கும். அவர்களின் அனுபவத்தைக் கூட்டமைப்புப் பயன்படுத்த முடியும், பயன்படுத்த வேண்டும். எனவே, ஆலோசகர்கள் என்ற கௌரவத்தை அவர்களுக்கு வழங்கி, அவர்களோடு சேர்ந்து பயணிக்க முடியும்.

இருக்க,
கூட்டமைப்பைப் பற்றிக் கதைத்துவிட்டுச் சுமந்திரனைப் பற்றிக் கதைக்காமல் போனால் எப்படி? இங்கு இருக்கும் பலருக்கும், வீட்டுச் சாப்பாட்டில் உப்பு அதிகமானாலும் சுமந்திரனைக் குற்றஞ்சொல்லாமல் இருக்க முடியாது எனும்போது, கூட்டமைப்பின் பின்னடைவைப் பற்றிக் கதைக்கும்போது சுமந்திரனைப் பற்றிக் கதைக்காமல்?

இங்கிருக்கும் பலர், சுமந்திரனால்தான் கூட்டமைப்புக்குப் பின்னடைவு ஏற்பட்டது என்று சொல்வது முழுமையான தவறு. கூட்டமைப்பில் இருக்கும் ஏனைய தலைமைகளைப் போல, இப்பின்னடைவுக்கான பொறுப்புச் சுமந்திரனுக்கும் உள்ளது. ஆனால், சுமந்திரன்தான் இதற்கான காரணமென்பது தவறு. சுமந்திரனைத்தான் மக்கள் வெறுத்தால், கூட்டமைப்புச் சார்பாக யாழ்ப்பாணத்தில் தெரிவான மூன்று உறுப்பினர்களும் மாவை சேனாதிராஜா, இமானுவேல் ஆர்னோல்ட், சசிகலா ரவிராஜ் என்று அமைந்திருக்க வேண்டும். ஆனால், முன்னரெப்போதையும் விட இத்தேர்தலில் சுமந்திரனோடு இணைந்து செயற்பட்ட சிறீதரன் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். செல்வம் அடைக்கலநாதன், மாவை உள்ளிட்டோர் சுமந்திரனுக்கெதிராகப் பகிரங்கமான நிலைப்பாடுகளை எடுத்தபோதும் அமைதியாக இருந்த சித்தார்த்தனும் இத்தேர்தலில் வெற்றிபெற்றார். அதேபோல், சுமந்திரனும் வெற்றிபெற்றார். ஆகவே, சுமந்திரனின் காரணமாகக் கூட்டமைப்பை மக்கள் நிராகரித்தார்கள் என்பது தவறென்று வாதிடுவேன்.

என்னைப் பொறுத்தவரை சுமந்திரனின் கொள்கைகளில் தவறுகள் இல்லை. ஆனால், சுமந்திரனின் தொடர்பாடல் திறன்கள் அல்லது ஒரு வகையான விட்டுக்கொடுப்பில்லாத ஒரு வகையான தன்முனைப்பு, வாக்காளர்களில் சிலரைத் தூரே தள்ளுவது உண்மைதான். எல்லா நேரங்களிலும் தர்க்கத்திறனும் புத்திசாலித்தனமான சிந்தனைகளும் மாத்திரம் மக்களை வென்றுவிடாது. “கண்மணி உன்னோடு” பாடலில் சொல்வதைப் போல, தமிழ் அரசியலில் அவ்வப்போது “தமிழ்த் தேசியம்”, “போராட்டம்” போன்ற சொற்களைத் தூவி, உணர்வுகள்ரீதியாக மக்களை நெருங்கிச்செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அதைப் போலித்தனத்துக்காகச் செய்யக் கூடாது. (உதா.: முள்ளிவாய்க்காலில் போய், “ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன்” என்று சத்தியப்பிரமாணம் எடுப்பதைப் போல) ஆனால், நீங்கள் நம்புகின்ற விடயங்களில், மக்களின் உணர்வுகளை நெருங்குகின்ற மாதிரியான கருத்துக்களை வெளிப்படுத்துவது அவசியம். அதை அவர் செய்ய வேண்டும். செய்வாரென்று நம்புகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!